மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாகத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும், அந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய முறைகேடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைகளுக்குப் பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம், மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (18.04.2026) சனிக்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
