Print
104views
மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பால்நிலை அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை தொடர்பான நிலைமைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து சேவை வழங்குநர்களுடன் கலந்துரையாடும் விசேட சந்திப்பு நேற்று (28) திங்கட்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் மன்னார் மாவட்டத்தில் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் சேவைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கனகேஸ்வரன் விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மேலும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரி, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், உளநல மருத்துவ அதிகாரி, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த உள நலச் சேவை உத்தியோகத்தர்கள், மன்னார் வைத்தியசாலை மருத்துவ அதிகாரி, சமூக மேம்பாட்டு தாதிய உத்தியோகத்தர் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன், வெளிச்சம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அங்கத்தவர்கள், அமரா பெண் தலைமையிலான குடும்ப ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் செயல்திறன் மிக்க குடிமக்கள் இளைஞர் குழுவின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மன்னார் மாவட்ட பெண்கள் சமாசம், அமரா பெண் தலைமையிலான குடும்ப ஒன்றியம் மற்றும் செயல்திறன் மிக்க குடிமக்கள் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
 
01gjip 021
FaLang translation system by Faboba