மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் கூராய் கிராம சேவையாளர் பிரிவில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கான தயார்நிலை மற்றும் மக்களின் அவசரகால செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் வெள்ள அனர்த்த ஒத்திகைப் பயிற்சி ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, 30.09.2026 அன்று, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா அவர்களின் தலைமையில், கூராய் கிராம சேவையாளர் பிரிவில் குறித்த ஒத்திகைப் பயிற்சியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான ஆரம்ப திட்டமிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, எதிர்வரும் ஒத்திகைப் பயிற்சியின் நோக்கம், நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்பாடுகள், வெள்ள அனர்த்தத்தின்போது மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், பாதுகாப்பான வெளியேற்றப் பாதைகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் பொறுப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், குறித்த ஒத்திகைப் பயிற்சியை பயனுள்ள வகையிலும் நடைமுறை ரீதியாகவும் முன்னெடுப்பதற்கான தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது
