மன்னார் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட மட்ட மாபெரும் விற்பனைக் கண்காட்சி (உள்ளூர் உற்பத்திச் சந்தை) இன்று (05.10.2026) மன்னார் மாவட்ட செயலக உள்வளாகத்தில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
உள்ளூர் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவித்தல், அவர்களின் தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை பொதுமக்களிடையே பிரபலப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இவ்விற்பனைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியில் மாவட்டத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களால் தயாரிக்கப்படும் பல்வேறு உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கண்காட்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உள்ளூர் உற்பத்திகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இக்கண்காட்சி மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு தமது உற்பத்திகளை நேரடியாக சந்தைப்படுத்துவதற்கும், புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
மன்னார் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிரதமர உள்ளக கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
