Print
95views
மன்னார் மாவட்டத்தில் பால்நிலை சார்ந்த வன்முறைகளைத் (SGBV) தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகளை வலுப்படுத்துவது தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் இன்று (21.10.2026) மன்னார் மாவட்டச் செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) நிதியுதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, மன்னார் மாவட்டச் செயலாளர் / அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, பால்நிலை சார்ந்த வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிந்துரை வழிமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் மாவட்ட, பிரதேச மட்டங்களில் பால்நிலை சார்ந்த வன்முறைத் தடுப்பு மன்றங்களை நிறுவுதல் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பிரதிநிதிகள், இலங்கைக்கான UNFPA பிரதிநிதி திரு. புன்ட்சோ வங்யெல், UNFPA ஆலோசகர் திருமதி. உடேனி தேவரப்பெரும, திருமதி. பிமாலி அமரசேகர, பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி, மனநல ஆலோசகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகப் பிரதிநிதிகள், மித்துரு பியச மற்றும் சட்ட உதவி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் பால்நிலை சார்ந்த வன்முறைகளைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் சேவைகளை உரிய முறையில் வழங்குவதற்கும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
 
 1  2  3
FaLang translation system by Faboba