சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோரை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்றது.
அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சமூக சக்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் போது அதிகாரிகளுக்கு இடையில் சிறந்த தொடர்பினை கட்டியெழுப்புவது அவசியமானது எனவும், அபிவிருத்திக்குத் தடையாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அவற்றை முறையாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஒரு அதிகாரி, தான் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக விழுமியங்கள் உள்ளதாகவும், அரச சேவை அதிகாரிகள் திறமையாகவும் குழுவாகவும் சிந்திப்பதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் எளிதாகுமென்றும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனிப்பட்ட முறையில் ஒரு அதிகாரியாக தன்னை வளர்த்துக்கொள்ளும் போது, ஊழலற்ற ஒரு அதிகாரியாக, தான் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையும் அவர் விளக்கினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரவித்த ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,
கடந்த பொருளாதார நெருக்கடியின் போது போராட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட குரல் ஊழல் அரசியல்வாதிகள் அகற்றப்பட வேண்டும் என்பதாகும். அரச ஊழியர்களும் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற கருத்தும் அதனூடே எழுந்தது. கடந்த தேர்தலில் மக்களுக்கு ஊழல் அரசியல்வாதிகளை வீட்டிற்கு அனுப்பி புதிய சக்தியொன்றை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்களால் அதிகாரிகளை மாற்றவோ, வீட்டிற்கு அனுப்பவோ முடியாது. அதற்கான முறையொன்று இல்லை. அரச நிறுவனத்தில் வேலை ஒன்றைச் செய்து கொள்ளச் செல்லும்போது ஏதேனும் அநீதி, நியாயமற்ற செயல் அல்லது தீங்கு இழைக்கப்பட்டால், அது குறித்துத் தெரிவிக்க ஒரு இடம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் நாம் அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகளை ஏற்படுத்தினோம்.
ஊழல் என்றால் என்ன? இது குறித்து அரச ஊழியர்கள் மத்தியிலும் தெளிவான கருத்து இல்லை. தனது கடமைக்காக வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தனது சொந்தச் தேவைகளுக்காக அல்லது சுகபோகத்திற்காக எவ்வாறேனும் பயன்படுத்தினால் அது ஊழலாகும். இவற்றுக்கு ஆரம்பத்தில் தலையிடாவிட்டால், உயர்மட்டத்தில் இருந்தே இவ்வாறு செயற்பட்டால், இது சாதாரண முறையாக மாறிவிடுகிறது. நமது நாட்டில் இருந்தது அத்தகைய முறையொன்றாகும். நாம் ஏன் இதனை ஒழிக்க வேண்டும்? இவை இறுதியில் பொருளாதார நெருக்கடியாக மாறக்கூடும். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வரத் தயங்குகிறார்கள்.
அக்காலத்தில் தேவையான திட்டங்கள் செய்யப்படவில்லை, தேவையற்ற திட்டங்களே முன்னெடக்கப்பட்டன. இவை அனைத்தின் மூலமும் நாடு கடனில் சிக்கியது. நமது நாடு இறுதியில் எரிபொருள் இறக்குமதி செய்வதற்குக்கூட வெளிநாட்டு நாணயங்கள் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டது. மக்களுக்குத் தாங்க முடியாத வகையில் வரிகள் விதிக்கப்பட்டன. வறுமை அதிகரித்தது. இதற்குக் காரணம் ஊழலாகும். அதனால் மனிதத் தொடர்புகள் இல்லாது போய் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இப்போது இது தனியார் துறை வரைக்கும் பரவிவிட்டது. இந்தக் காரணங்களால் ஊழலைத் தடுத்தல் தொடர்பில் நமது நாடு உலக அளவில் மிகக் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டது.
மக்களுக்கு இவற்றைத் தெரிவிக்கக்கூடிய இடமொன்று இருக்கவில்லை. இவற்றை வெளிப்படுத்தினால் தமது பாதுகாப்புக்கு என்னவாகும் என்ற கேள்வி மக்களுக்கு இருந்தது. அதனால் எவரும் தமக்குத் தெரிந்தவற்றைக் கூறவில்லை. இறுதியில் இவை எங்கேயாவது வெடித்துச் சிதறும். போராட்டம் என்பது அத்தகையதொரு சந்தர்ப்பமாகும். இவற்றைக் கூறக்கூடிய இடத்திற்கு மக்களைக் கொண்டுவர வேண்டும். அதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது அரச ஊழியர்களின் நேர்மையை அதிகரித்துக் கொள்வதாகும். அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகள் நிறுவப்பட்டமை அதற்காகத்தான். உங்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் நியாயமின்மை குறித்து அந்த நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்யுங்கள். நாம் அதற்காகத் தலையிடுவோம்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, ஐந்து தலைப்புகளின் கீழ் விடயங்களை தெளிவுபடுத்தினார். 2027 கிராமிய வீதி அபிவிருத்தி தரவு முறைமை, ஆராய்ச்சிப் பிரிவு (Innovation Hub) அறிமுகப்படுத்தல், மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்தல், குளங்கள் மற்றும் குளத் தொடரமைப்பு முறை தொடர்பான இணையவழி தகவல் முறைமைக்கு தரவுகளைப் பெற்றுக்கொள்ளல், தொழில்முயற்சி அபிவிருத்தி தரவு முறைமை அறிமுகப்படுத்தல் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார,
சமூக சக்தி திட்டத்தை சமூக அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தியின் மைய நிலையமாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். தற்காலத்தில் அதன் மிக முக்கியமான காரணி தரவுகளும் தகவல்களுமாகும். உலகில் முறையான தரவுகளும் தகவல்களும் இல்லாத காரணத்தினால் பல பேரரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. எனவே, எமது சமூக சக்தி செயலகத்தின் ஒரு பிரதான நோக்கம் தேசிய அபிவிருத்தி தரவு முறைமையை உருவாக்குவதாகும். அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதில் அடையாளம் காணப்பட்ட சவால்களுக்குத் தீர்வுகளைக் கண்டறிந்து இந்த தரவு முறைமை கட்டமைக்கப்பட்டுள்ளது.
நாம் ஏற்கனவே நான்கு தரவு கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். அடுத்த ஆண்டு கிராமிய மட்ட அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு தகவல் கட்டமைப்பு ஒன்று தயாரிக்கப்படுகின்றது. அதில் ஒரு கட்டமைப்பு கிராமிய வீதிகள் தொடர்பான தகவல்களாகும். அதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான பத்தாயிரம் வீதிகள் இருந்தன. அதற்குக் கீழேயுள்ள அனைத்து வீதிகள் தொடர்பாகவும் தகவல் கட்டமைப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக சமூக சக்தி செயலகமும், பொதுநிர்வாக அமைச்சும் இரண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளன. அதற்காக 2027 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதமளவில் நாம் இதற்குத் தயாராகிவிட்டால், ஜனவரி மாதமளவில் பணிகளைத் தொடங்க எம்மால் முடியும்.
இந்தத் தரவு கட்டமைப்பைப் பேணிவருவதன் மூலம், சமூகத்தினரால் சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், அது தொடர்பான தகவல்களும் அந்தத் தரவு கட்டமைப்பில் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் எப்பொழுதேனும் சம்பந்தப்பட்ட வீதியை அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
நாம் இப்போது காலநிலை மாற்றங்கள் ஏற்படும் ஒரு காலப்பகுதியையே எதிர்கொண்டுள்ளோம். கடுமையான வறட்சி மற்றும் அதிக மழைவீழ்ச்சி கொண்ட காலநிலை மாற்றங்களுக்கு மத்தியில், மக்களுக்குத் தேவையான குடிநீர் மாத்திரமன்றி, விவசாய நிலங்கள் மற்றும் ஏனைய தொழில்துறை தேவைகளுக்காகவும், மின்சார உற்பத்தி உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் எம்மிடமுள்ள நீரை நாம் முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளது.
அதேபோல், பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் மேலும் கீழ் நோக்கிச் சென்று, ஒவ்வொரு கிராமத்தையும் இலக்கு வைத்து மூன்று வருடத் திட்டமாக அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். தற்போது நாங்கள் அதற்கான மூலோபாய தேசியத் திட்டத்தைத் தயாரித்து வருகிறோம். இது தொழில்நுட்ப ரீதியில் சற்று கடினமான ஒரு பணியாகும்.
சமூக சக்தி செயலகம் என்ற முறையில், அதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். மேலும், நாம் அதனுடன் மாத்திரம் நின்று கொள்ளாமல், அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட ஏனைய நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் போன்ற உரிய தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைக் கொண்ட ஏனைய நிறுவனங்களுடனும் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தைத் தயாரிக்கிறோம்.
எமது அடிப்படை எண்ணக்கரு, அபிவிருத்திக்கான தேவையைச் சமூகம் இனங்கண்டதன் பின்னர், அதற்கான அபிவிருத்தி சாத்தியங்களை அது தொடர்பான பன்முகக் குழுக்கள் ஊடாக இனங்கண்டு, சமூக சக்தி திட்டம் மூலம் நடைமுறைப்படுத்துவதாகும்.
இங்கு கருத்துத் தெரிவித்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார,
அபிவிருத்தி நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் மத்திய நிலையங்களாக மாவட்ட மற்றும் பிரதேச செயலக கட்டமைப்பை மாற்றுவது எவ்வாறு என்பது குறித்து ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல்களின் போது குறிப்பிட்டார்.
முன்னைய கட்டமைப்பில் பிரதேச செயலகம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திட்டமிடல் பிரிவின் தலையீட்டுடன் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஊடாக அவை நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது அதற்கு கீழ் மட்டத்தில் மற்றொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாகச் சமர்ப்பிக்கப்படும் திட்ட பரிந்துரைகள் மற்றும் திட்டமிடல்களில் சில சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன், அவை கிராமியத் திட்டங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பிரதேச, மாவட்ட, மாகாண அல்லது தேசிய மட்டத்திலான திட்டங்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.
கிராமியப் பிரதேச அபிவிருத்திச் சபைகள் தமக்குரிய புவியியல் பிரதேசத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி பரிந்துரைகளைச் சமர்ப்பித்தாலும், அங்கு வேறு சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், அவற்றை இனங்கண்டு தேசிய மட்டத்திலான திட்டங்களாக மாற்றியமைக்கும் பொறுப்பு பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், மாகாண சபைகள் மற்றும் தேசிய மட்டத்திற்கு உரியதாகும். பரிந்துரைகளைச் சமர்ப்பித்த குழுக்கள் தமது கிராமியப் பிரதேசங்களில் அவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பயன்கள் கிடைப்பதைக் காண்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதால்,
விரைவான பயன்களைத் தரக்கூடிய விடயங்களை உள்ளடக்கி அவற்றை மீளமைப்பதற்கான தேவை உள்ளது.
நீண்ட காலம் கடந்து பாரம்பரிய கட்டமைப்பிற்குள்ளேயே இது இடம்பெறுமாகவிருந்தால், இந்த வேலைத்திட்டம் மீதான நம்பிக்கை அற்றுப்போகக்கூடும். அத்துடன், இக்கட்டமைப்பு அடிப்படையை உருவாக்கும்போது இந்தக் கட்டமைப்புக்குள் மனிதர்களே இருப்பதால், கிராமிய, பிரதேச அல்லது மாவட்ட மட்டத்தில் அவர்கள் சிந்திக்கும் விதம், நபர்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் அறிவு என்பவற்றின் காரணமாக திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது தவறான புரிதல்களும் முரண்பாடுகளும் ஏற்படலாம். நிர்வாகம் மற்றும் திட்டமிடல் பற்றிய பரிச்சயம் உள்ள ஒரு குழுவாக முதிர்ச்சியுடன் அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான தேவை காணப்படுகிறது.
அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு தேசிய மட்டம் வரை ஒரு கட்டமைப்பு காணப்படுவதுடன், அதனைப் பயன்படுத்த வேண்டும். ஒரு வருட அனுபவத்தினூடாகத் தோன்றிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடி எதிர்காலப் போக்கைத் தீர்மானிப்பது முக்கியமானதாகும். பாரம்பரியமாக அபிவிருத்தித் திட்டங்கள் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் மட்டுப்படுத்தப்பட்டாலும், வருட நடுப்பகுதியிலும் கூட எதையாவது அங்கீகரித்து நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பு மாற்றம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய மட்டத்தில் திட்டமிடப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை சமூக அபிவிருத்திச் சபைகளுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். சமூக அபிவிருத்திச் சபைகளில் உள்ளவர்கள் கிராமத்தில் வீதி அமைப்பது போன்ற தங்களது நேரடி அனுபவங்கள் மீது மாத்திரம் கவனம் செலுத்தாமல், தேசிய மட்டத்திலான தொலைநோக்குடன் செயற்பட வேண்டும். அத்தகைய சபைகளில் இருந்து வரும் பரிந்துரைகளில் உள்ள சாத்தியக்கூறுகள் தேசிய தளத்தில் கருத்தாடலிற்கு உட்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத் திட்டங்கள், முதலீடுகள் அல்லது உதவிகள் கிடைக்கும் போது அது குறித்த தெளிவு இருக்க வேண்டும். மேலும் கிராம மக்களை நகரத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக கிராமங்களிலேயே சிறந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனால் சமூக அபிவிருத்திச் சபைகளின் அதிகாரிகள் கிராமத்திற்கு அப்பால் சென்ற விரிவான தொலைநோக்குடன் செயற்படுவது மிக முக்கியமானதாகும்.
அரச அதிகாரிகளுக்குக் குறிப்பாக அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகளிடமிருந்து உச்சபட்ச ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதை எதிர்பார்ப்பதாகக் கூறப்பட்டது. அதேபோல், அதிகாரிகள் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட அடிப்படைக் கடமைகளைப் பல்வேறு போலியான கோஷங்கள் மற்றும் அடிப்படையற்ற தொழிற்சங்கப் போராட்டங்களை முன்வைத்துச் செய்யாமல் தவிர்ப்பதற்கான ஒரு போக்கு காணப்படுகின்றது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்குத் தத்தமக்குரிய கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து அனைவரும் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
சமூக சக்தி தேசிய திட்டத்தின் 2026 ஆம் ஆண்டு செயற்பாடுகள் தொடர்பில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சக்தி தேசிய திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால நிகழ்ச்சிகள் தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எச்.எம்.கே.ஜே.பி. குணரத்ன ஆகியோர் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், Clean Sri Lanka திட்டத்தின் கீழ் 'அத்தம' திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக, 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குதல், ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழக்கு முகாமைத்துவ கட்டமைப்பு, ஆகிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் பல்வேறு பிரிவுகளின் மேலதிக செயலாளர்களால் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
சமூக சக்தி தேசிய திட்டத்தின் நிறைவேற்றுச் சபை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
