Print
85views
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, முதியோர் தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மன்னார் நகரப் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதியோர் தின நிகழ்வு இன்று (03)மன்னார் நகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது, மன்னார் பட்டித்தோட்டம் புதிய உதயம் முதியோர் சங்கம், புனித வளனார் முதியோர் சங்கம், தாழ்வுபாடு புதிய வளனார் முதியோர் பகல்நேரப் பராமரிப்பு நிலையம், தலைமன்னார் கிராமம் புனித லோரன்சியார் முதியோர் சங்கம், உயிர்த்தராசன்குளம் முதியோர் சங்கம் உள்ளிட்ட முதியோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாடகம், வில்லுப்பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
மேலும், “நமது நாட்டிற்கு முதியோர் இல்லங்கள் அவசியமா? அவசியமில்லையா?” என்ற தலைப்பில் மன்னார் சித்தி விநாயகர் பாடசாலை மற்றும் மன்னார் கௌரி அம்பாள் பாடசாலை மாணவர்களின் பட்டிமன்றமும் நடைபெற்றது.
இதன்போது, முதியோர் சமாச நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வாழ்த்துக் கவிதை வாசிக்கப்பட்டதுடன்,
முதியோர் சங்கங்களின் செயற்பாட்டாளர்களுக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அவர்களுக்கான பரிசில்களை மன்னார் நகர பிரதேச செயலாளர் கே. காந்தீபன் வழங்கி வைத்தார்.
மன்னார் நகரப் பிரதேச செயலாளர் கே. காந்தீபன் தலைமையில், காலை 9.30 க்கு ஆரம்பிக்கப்பட்டு பகல் ஒரு மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், மன்னார் நகர சபைத் தலைவர் டேனியல் வசந்தன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
அத்துடன், ஓய்வுநிலை கிராம நிர்வாக அலுவலர் ஏ. விமலேந்திரகுமார், வலயக் கல்விப் பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் எஸ். ரமேஷ், மாவட்ட முதியோர் சமாச செயலாளர் எல்.பி. ஏனஸ்ட் குரூஸ், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதியோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
National Elders day20261 National Elders day20262 National Elders day20263 National Elders day20264
 
National Elders day20265 National Elders day20266 National Elders day20267 National Elders day20268
FaLang translation system by Faboba