தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட நல்லிணக்கக்குழு கூட்டமானது ஏப்ரல் மாதம் 30ம் திகதி பி.ப 2 மணியளவில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
மாவட்ட செயலாளர் திரு.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு குழு உறுப்பினர்களாக அதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குரு முதல்வர் வண.அருட்தந்தை விக்டர் சோசை, மௌளவி வண.எஸ்.ஏ.அசீம், வண.அப்போஸ்தலிக்க சபை போதகர் ஏ.நிமால் கூஞ்ஞ, வண.தர்மகுமார குருக்கள், வண.திரு.ஜி.அன்ரனி டேவிற்சன் மன்னார் நகர சபை தவிசாளர், வண.திரு.எஸ்.எச்.எம்.முஜாகிர் மன்னார் பிரதேச சபை தவிசாளர், வண.திரு.ஏ.ஜி.ஏ.சுபீகான் முசலி பிரதேச சபை தவிசாளர், மன்னார் நகர சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள்(மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி, மடு), திரு.சபுர்தீன் சிரேஸ்ட சட்டத்தரணி, திரு. கதிர்காமநாதன் சைவ மத ஒன்றியம்,திரு.திலீபன் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், திரு விக்ரமசிங்க மன்னார் நகர பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.புஸ்பகுமார சிலாவத்துறை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.வதுலியத்த இலுப்பைக்கடவை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.சசந்த அடம்பன் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.இ.ஜி.குணரத்ன உதவிஃதலைமையிடத்து ஆய்வாளர் மன்னார், திரு உடவத்த தலைமையிடத்து ஆய்வாளர் தலைமன்னார், திரு.சோமஜித் பேசாலை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, CCT நிறுவனத்தின் பணிப்பாளர் திரு ஜெகான் பெரேரா, திரு ஜோ வில்லியம் தவிசாளர், மன்னார் மற்றும் மடு பிரதேச பிரதி கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக மத ஒன்றிய தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
கடந்த 21ம் திகதி குண்டுதாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து மன்னார் மாவட்ட மக்களின் பாதுகாப்புக்காக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்ட பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
- 01. மன்னார் மாவட்டத்தில் 06 பௌத்த ஆலயங்களும், 142 கிறிஸ்தவ ஆலயங்களும், 80 முஸ்லிம் பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன. அங்கு வருகை தருகின்ற அனைத்து மக்களும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பரிசோதனை செய்து அனுப்பப்படுகின்றனர்.
- 02. தலைமன்னார் மற்றும் பேசாலை கடற்பரப்பினால் இந்தியா செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் அங்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
- 03. பொலிஸ் உதவியுடன் சாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- 04. வழிபாடுகள் நடைபெறும்போது தலங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும்.
- 05. பாடசாலைகள் ஆரம்பிக்கும் நாட்களிலும் பின்வரும் நாட்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்விடயம் தொடர்பான அறிக்கைகள் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
- 06. யாருக்கேனும் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் வெடிகுண்டுகளுக்கு மதம் மொழி தெரியாது என்பதால் இந்நாட்களில் நாம் மிக அவதானமாக இருக்குமாறும் எவரிலேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்காக மக்களின் விசேட உதவிகளை தாம் நாடி நிற்பதாக கூறினார்.
