வடமாகாண பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான மென்பந்து சுற்றுப் போட்டியில் மன்னார் மாவட்ட செயலக அணி மூன்றாவது முறையாக வெற்றிகிண்ணத்தினை தனதாக்கிகொண்டது
2025 ஆம் ஆண்டின், வடமாகாணத்தின் மாவட்ட செயலகத்திற்குட்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டி வியாழக்கிழமை (13) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர் அணியினர் இன்றைய தினம் மென்பந்து சுற்றுப் போட்டியில் மோதினார்கள்.
இந்த சுற்றுப் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் மன்னார் யாழ்ப்பாண அணிகள் மோதியதுடன் இறுதிப் போட்டிக்கு மன்னார் அணி தகுதிபெற்றது.
மற்றைய பிரிவில் முல்லைத்தீவு வவுனியா அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதியது. இதில் முல்லைத்தீவு மாவட்ட அணி எந்தவித விக்கெட் இழப்பின்றி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இன்றைய இறுதிப் போட்டியில் மன்னார் எதிர் முல்லைத்தீவு அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற முல்லைத்தீவு மாவட்ட செயலக அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட எட்டுப்பந்து பரிமாற்றத்தில் மூன்று இலக்குக்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
79 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் களம்புகுந்த மன்னார் மாவட்ட அணி எட்டாவது பந்துப் பரிமாற்றத்தில் நான்கு இலக்கினை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றதுடன் முல்லைத்தீவு மாவட்ட அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
முல்லைத்தீவு மாவட்ட அணியில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் விளையாடியிருந்தார். அதே போன்று மன்னார் அணியில் அதன் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன், கிளிநொச்சி அணியில் அதன் அரசாங்க அதிபர் திரு.முரளிதரன் அவர்களும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதிப் போட்டியில் எந்த அணி கிண்ணத்தை கைப்பற்றும் என்பது தீர்மானிக்க முடியாத அளவிற்கு இறுதிப்பந்து பரிமாற்றம்வரை போட்டி விறுவிறுப்பாக அமைந்தது சிறப்புக்குரியதாகும்.
 
jobfair6 jobfair7
 
jobfair8 jobfair9
 
jobfair10 jobfair11
 
jobfair12 jobfair13
 
jobfair15