உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இம்முறை மன்னார் மாவட்டத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான இரண்டாம் கட்ட விசேட கலந்துரையாடல் இன்று (11) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், எதிர்வரும் செப்டெம்பர் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உலக சுற்றுலா தின நிகழ்வுகளுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. நிகழ்வுகளுக்கான பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள தரப்பினர், தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, அதற்குத் தேவையான வளங்கள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமது திட்டங்களை முன்வைத்தனர்.
அத்துடன், நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களின் போக்குவரத்து, பாதுகாப்பு, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, நிகழ்வுகளை சிறப்பாகவும் தடையின்றியும் முன்னெடுப்பதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது மற்றும் பிரதேச ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தின் அரச திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், சுற்றுலாத்துறை பங்குதாரர்கள், வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உலக சுற்றுலா தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பான முதலாவது கட்டக் கலந்துரையாடல் கடந்த 8ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டக் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
மேலும், நிகழ்வுகளுக்கான இறுதி ஏற்பாடுகளை ஆராயும் வகையில் மூன்றாம் கட்டக் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.





