மன்னார் மாவட்ட வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாளி சமரசிங்க அவர்களின் தலைமையில் இன்று (09-11) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
2010 ஆம் ஆண்டிலிருந்து பிரதேச செயலகங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான நிலப்பரப்புகளில் மணல் மற்றும் கனிம வளங்களை அகழ்வு செய்யும்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலைமைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், அபிவிருத்தித் திட்டங்களுக்கும் காணியற்ற மக்களை மீள்குடியேற்றுவதற்கும் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை விடுவித்துக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மடு, முசலி மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் மணல் அகழ்வு செய்வதற்காக வழங்கப்பட்ட பெரும்பான்மையான அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியற்றதாக மாறியுள்ளமையினால், வறிய குடும்பங்களின் வீடமைப்பு நிர்மாணப் பணிகளுக்கு மணலைப் பெற்றுக்கொள்வதில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.
மேலும், வனப்பாதுகாப்பு திணைக்கள நிலங்களிலிருந்து மண் மற்றும் கிராவல் (பரல் கற்கள்) பெற்றுக்கொள்வதில் நிலவும் தடைகள் காரணமாக, ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த கிராமிய வீதிகள் மற்றும் கட்டிடங்களைப் புனரமைக்கும் பணிகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன. அதற்கமைய, உரிய மேற்பார்வையின் கீழ் குறித்த காணிகளிலிருந்து மண், கிராவல் மற்றும் மணல் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துப் பிரதி அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பிரதி வனப்பாதுகாப்பாளர் பேராசிரியர் வசந்த லியனகே, மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் உள்ளிட்ட மன்னார் வனச்சரக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





