மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால், வெள்ள அனர்த்தங்களின்போது மேற்கொள்ள வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் அனர்த்த மீள்திறனை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட செயலாளரின் வழிநடத்தலில், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ரி.என். சூரியராஜா அவர்களின் தலைமையில், 08.10.2026 அன்று கூராய் மற்றும் சீதா விநாயகர் குளம் கிராமங்களை உள்ளடக்கிய வெள்ள அனர்த்த ஒத்திகைப் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
இவ் ஒத்திகைப் பயிற்சியின் போது சுமார் 97 குடும்பங்களைச் சேர்ந்த 305 நபர்கள் பாதுகாப்பான முறையில் மன். கல்லியடி பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டு, வெள்ள அனர்த்தத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரகால வெளியேற்ற நடைமுறைகள் மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், கிராம சேவையாளர்களின் நிர்வாக உத்தியோகத்தர், இலங்கை இராணுவத்தினர், இலங்கை கடற்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அடம்பன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், OPEnE நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் தொண்டர்கள், சென். ஜோன் அம்புலன்ஸ் அதிகாரிகள் மற்றும் தொண்டர்கள், மன்னார் செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் தொண்டர்கள், அத்துடன் கூராய் கிராம அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஒத்திகைப் பயிற்சியை சிறப்பாக முன்னெடுத்தனர்.
வெள்ள அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு விரைவாக வெளியேற்றுதல், அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் இவ் ஒத்திகையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதன் மூலம் கூராய் கிராம சேவையாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்திற்கான தயார்நிலை, அவசரகால பதிலளிப்பு திறன் மற்றும் அனர்த்த மீள்திறன் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் இவ் ஒத்திகைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது
 
koorai31 Koorai32 koorai33
 
koorai34 koorai35