2026.10.19 ஆம் திகதி, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் (DDMCU) ஏற்பாட்டில், மடு பிரதேச செயலாளர் திரு. ஆர்.சி. அமல்ராஜ் அவர்களின் தலைமையில், மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடகிழக்கு பருவமழை முன்னாயத்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ரி.என். சூரியராஜா அவர்கள், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள், அனர்த்த அபாயக் குறைப்பு, அவசரகாலப் பதிலளிப்பு நடவடிக்கைகள் மற்றும் எல் நினோ தாக்கம் தொடர்பாக விளக்கமளித்தார்.
இதன்போது, வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்துப் பாதைகள் துண்டிக்கப்படக்கூடிய அபாயமுள்ள பகுதிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, தேக்கம், குஞ்சுக்குளம் பகுதிகளில் மல்வத்து ஓயா வெள்ளப்பெருக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் மலுவராயர்–கட்டையடம்பன், தம்பணைக்குளம் ஆகிய பிரதான வீதிகள் வெள்ளத்தினால் துண்டிக்கப்படக்கூடிய அபாயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இவ்வீதிகள் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளக்கூடிய போக்குவரத்துச் சிரமங்கள், மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் அவசரகால முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மடு பிரதேச செயலாளர், இலங்கை இராணுவ அதிகாரிகள், 542 ஆம் படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் திறம்பட எதிர்கொள்வதற்கும், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் முன்னாயத்த நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், திணைக்களங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இக்கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.





