மன்னார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 67 குடும்பங்களைச் சேர்ந்த 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூறாய் கிராமம் , சீது விநாயகர் குளம் கிராமத்தினை சேர்ந்த 67குடும்பங்களைச் சேர்ந்த 161பேர் இலுப்பைக்கடவை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், கிராமங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது