மாவட்ட நிர்வாகத்தின் வினைத்திறனை மேம்படுத்துதல், அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கான அரச சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மன்னார் மாவட்டத்தின் 2ஆவது பிரதேச செயலாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டிற்கான 2ஆவது பிரதேச செயலாளர்கள் மாநாடு, மாவட்ட அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில், நேற்று (29.10.2026) காலை 8.30 மணிக்கு நானாட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகங்களின் வினைத்திறனை மேம்படுத்துதல், பொதுமக்களுக்கான அரச சேவைகளின் தரத்தை உயர்த்துதல், அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு கூட்டப்பட்டது.
உற்பத்தித்திறன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் பாராட்டு
மாவட்டத்தின் அரச நிறுவனங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்வாகச் சீர்திருத்தங்கள், தர முகாமைத்துவ நடைமுறைகள், உற்பத்தித்திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புடனான கூட்டுச் செயற்பாடுகள் குறித்து மாநாட்டில் ஆராயப்பட்டது.
கடந்த காலங்களில் பிரதேச செயலகங்களின் நிர்வாகச் செயற்பாடுகள், அலுவலக முகாமைத்துவம், உற்பத்தித்திறன், சேவை வழங்கல் மற்றும் பொதுமக்களை மையப்படுத்திய அணுகுமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வரும் பிரதேச செயலாளர்கள் மாநாடுகள், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும், குறைபாடுகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்யவும், நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் பெரிதும் உதவியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பொதுமக்களுக்கான சேவைகளை மேலும் தரமானதாகவும், துரிதமானதாகவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடியதாகவும் மேம்படுத்துவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
பிரதேச செயலாளர்கள் மாநாடுகளின் முக்கியத்துவம்
இம்மாநாடுகள் மூலம் மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, பரஸ்பர அனுபவப் பகிர்வு, சிறந்த நிர்வாக நடைமுறைகளின் பரிமாற்றம் மற்றும் பொதுச் சேவைகளின் தர மேம்பாடு ஆகியவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அலுவலக முகாமைத்துவம் மற்றும் சேவை வழங்கல் தொடர்பான கள ஆய்வு
மாநாட்டிற்கு முன்னதாக, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் நானாட்டான் பிரதேச செயலகத்தின் அலுவலகச் சூழல், நிர்வாக ஒழுங்கமைப்பு, அலுவலக முகாமைத்துவ முறைமைகள், தூய்மை மற்றும் பசுமைப் பராமரிப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான சேவை வழங்கல் ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குறிப்பாக, அரச நிறுவனங்களின் தூய்மை, பசுமையான அலுவலகச் சூழலை உருவாக்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு முகாமைத்துவம், பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் நிலைபேறான தூய்மைப் பராமரிப்பு நடைமுறைகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், தேசிய தூய்மை வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புடனும் தொடர்ச்சியான கண்காணிப்புடனும் நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
நிர்வாக மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளின் முன்னேற்ற மீளாய்வு
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், முன்னைய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அமுலாக்க முன்னேற்றம், நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, கிராமிய வீதி அபிவிருத்தி உள்ளிட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சமூக நலன்புரித் திட்டங்கள் மற்றும் பிரதேச செயலகங்களினூடாக முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும், பிரதேச செயலகங்களின் நிர்வாகம், நிதி முகாமைத்துவம், திட்டமிடல், அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், நலன்புரி உதவிகள், சேவை வழங்கலில் காணப்படும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வு நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
நானாட்டான் பிரதேசத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ள அடிப்படைத் தேவைகள், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், நிலுவையிலுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டது.
இவ்விடயங்களை உரிய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுத்து, பொதுமக்களின் தேவைகளுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
உத்தியோகத்தர்களின் பங்கேற்பு
இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை நானாட்டான் பிரதேச செயலாளர் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
மாநாட்டில் மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடற்பணிப்பாளர், , ஏனைய பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தின் அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, உற்பத்தித்திறன் மற்றும் தர முகாமைத்துவ நடைமுறைகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்துவதன் மூலம், பொதுமக்களுக்கு வினைத்திறனானதும் தரமானதுமான அரச சேவைகளை வழங்குவதற்கான முக்கியமான கலந்துரையாடலாக இம்மாநாடு அமைந்தது.





